கோத்தகிரி
கோத்தகிரி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்த, 54 கிலோ எடைகொண்ட இராட்சத அளவிலான 'திருக்கை' மீனை, பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டுகளித்து சென்றனர்.
திருக்கை மீன்
கோத்தகிரி பகுதிக்கு கேரளா மாநிலம், கோழிக்கோடு மற்றும் நாகப்பட்டினம் பகுதியிலிருந்து மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு, மத்தி, அயிலை, வஞ்சுரம், செம்மீன், சுறா, ஏட்டை, கிளி மீன், டேம் மீன்கள், மற்றும் சிறிய வகை மீன்கள், அதிகளவில் விற்பனையாகிறது. இந்நிலையில், நேற்றுக்காலை கோத்தகிரி மார்கெட்டில் உள்ள மீன் வியாபாரி ஒருவருக்கு, நாகப்பட்டினத்திலிருந்து ராட்சத 'திருக்கை' மீன் ஒன்று விற்பனைக்காக வந்தது. அந்த மீனை மீன் வியாபாரி பொதுமக்கள் பார்வைக்காக தனது கடையில் தொங்கவிட்டு வைத்திருந்தார். அந்த மீன் 54 கிலோ எடைக் கொண்டதாகவும், பார்ப்பதற்கு பிரமாண்ட அளவிலும், தட்டையாகவும், அதன் இரு புறமும் பறவையின் சிறகுகள் போன்ற நீண்ட துடுப்புகளும், வலிமையான நீண்ட வாலுடன், கீழ்பகுதியில் மனிதனின் முகவடிவிலும் காணப்பட்டது.
பொதுமக்கள் வியப்பு
வித்தியாசமான அதன் உருவ அமைப்பை கொண்டதாகவும், இராட்சத அளவிலும் இருந்த அந்த மீனை, மார்க்கெட்டிற்கு பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். இதனை, இப்பகுதி, வியாபாரிகள் 'தெரண்டி' என, கூறி விற்பனை செய்தனர்.மக்கள் கூறுகையில், 'கோத்தகிரி பகுதியில், பெரிய அளவிலான மீன்கள் விற்பனைக்கு வருவதில்லை. இதனால், இந்த மீனை பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருந்தது' என்று தெரிவித்தனர்.