கண்டமங்கலம்
கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அதிக அளவு திடக்கழிவுகள் சேகரிக்கும் கிராம ஊராட்சிகள், நகர்புறத்திற்கு அருகில் உள்ள கிராம ஊராட்சிகள் போன்ற சில குறிப்பிட்ட கிராம ஊராட்சிகளில் வீடுகள், கடைகள், மண்டபங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் உற்பத்தியாகும் திடக்கழிவு குப்பைகளை டிராக்டர்களைக் கொண்டு சேகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான நிதியினை 15-வது நிதிக்குழு மூலம் 30 சதவீதமும், முழு சுகாதாரத் திட்டத்தின் மூலம் 70 சதவீதமும் நிதி ஒதுக்கப்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் இ-டெண்டர் கோரப்பட்டு, ஒரு டிராக்டர் ரூ. 6 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீடு செய்யப்பட்டு 6 டிராக்டர் 36 லட்சத்து 90 ஆயிரம் நிதியில் வாங்கப்பட்டன.
புதிய டிராக்டர்கள் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வி.அகரம், சித்தலம்பட்டு, சின்னபாபு சமுத்திரம், மிட்டா மண்டகப்பட்டு, சிறுவந்தாடு, கண்டமங்கலம் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் ஆர்.எஸ். வாசன், ஒன்றிய குழு துணைத் தலைவர் நஜீரா பேகம் தமின் ஆகியோர் கலந்துகொண்டு பஞ்சாயத்து தலைவர்களான பிரியதர்ஷினி முருகன், வரதராஜன், ராஜேஸ்வரி சந்திரசேகர், தனம் அருளரசன், சரவணன், முருகன் ஆகியோரிடம் டிராக்டர்கள் மற்றும் அதற்கான சாவிகளை ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பந்தம், சண்முகம் மற்றும் மேலாளர் சண்முகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.