மாவட்ட செய்திகள்

தெலுங்கானாவில் இருந்து 7,200 டன் ரேஷன் அரிசி நெல்லை வந்தது

தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2 ரெயில்களில் 7,200 டன் ரேஷன் அரிசி நெல்லைக்கு வந்தது.

நெல்லை, மே:

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தடையின்றி அரிசி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த நிலையில் மத்திய தொகுப்பில் இருந்து ரெயில் மூலம் நெல்லைக்கு அரிசி மூடைகள் கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மேலும் 2 ரெயில்களில் அரிசி மூடைகள் கொண்டுவரப்பட்டது. தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து தலா 42 பெட்டிகள் கொண்ட 2 ரெயில்களில் 7,200 அரிசி மூடைகள் ஏற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டன.

அந்த 2 ரெயில்களும் நேற்று நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தன. அதில் இருந்த அரிசி மூடைகளை தொழிலாளர்கள் லாரிகளுக்கு ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த அரிசி மூடைகள் அனைத்தும் மத்திய அரசின் உணவு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதேபோல் தஞ்சாவூர் பகுதியில் இருந்தும் அடுத்தடுத்து நெல்லைக்கு ரெயில்களில் அரிசி மூடைகள் கொண்டு வரப்படுகின்றன. இன்றும் (புதன்கிழமை) தஞ்சாவூரில் இருந்து 21 ரெயில் பெட்டிகளில் அரிசி கொண்டு வரப்படுகிறது.