மாவட்ட செய்திகள்

சென்னை மீனவர்கள் 9 பேர் நடுக்கடலில் தத்தளிப்பு; கடலோர பாதுகாப்பு படை மீட்டது

நடுக்கடலில் தத்தளித்த சென்னை மீனவர்கள் 9 பேர் இந்திய கடலோர பாதுகாப்பு படை மீட்டது.

சென்னையில் இருந்து கடந்த 13-ந்தேதியன்று 9 மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடந்த 25-ந்தேதியன்று, ஆந்திர கடலோர பகுதியில் வந்துக்கொண்டிருந்தபோது படகின் என்ஜினில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் தங்களை மீட்குமாறு இந்திய கடலோர பாதுகாப்பு படையிடம் தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான பிரியதர்ஷினி' கப்பல் கடல் மார்க்கமாகவும், ஹெலிகாப்டர் வானில் பறந்தபடியும் தேடுதல் வேட்டையை நடத்தியது. ஆந்திர கடலோர பகுதியில் மீனவர்கள் தத்தளித்தது தெரியவந்தது. இதையடுத்து கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான கப்பல் கொடுத்த தொழில்நுட்ப உதவியால் படகில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. பிரியதர்ஷினி' கப்பல் அணிவகுத்து செல்ல, தாங்கள் வந்த படகிலேயே 9 மீனவர்களும் பத்திரமாக விசாகப்பட்டினம் அழைத்துச்செல்லப்பட்டனர். பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.