காங்கேயம்,
காங்கேயத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.43 ஆயிரத்து 550 மற்றும் 6 சேவல்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பரஞ்சேர்வழி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டம் நடத்தப்படுவதாக காங்கேயம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் காங்கேயம் போலீசார் அப்பகுதிக்கு ரோந்து சென்று சோதனை செய்தனர். அப்போது பரஞ்சேர்வழி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் சிலர் ஈடுபட்டது தெரியவந்தது.
9 பேர் கைது
இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஈரோடு, நத்தக்காடையூர், வெள்ளகோவில் ஆகிய பகுதிகளை சேர்ந்த செல்லத்துரை (வயது 53), ஈஸ்வரமூர்த்தி (26), சந்திரன் (50), சரவணன் (27), தர்னேஷ் (22), பழனிசாமி (36), ஆனந்தகுமார் (27), குணசேகரன் (38), கதிரவன் (39) ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ரூ.43 ஆயிரத்து 550 மற்றும் 6 சேவல்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.