மும்பை,
சமூகவலைதளத்தில் ஜவான் படக்காட்சிகள் வெளியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜவான் படக்காட்சிகள் கசிவு
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜவான்'. அட்லி இயக்கி உள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். ஜவான் படம் அடுத்த மாதம் 7-ந் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில் சிலர் ஜவான் படக்காட்சிகளை டுவிட்டரில் பதிவிட்டனர். அந்த காட்சிகள் படப்பிடிப்பின் போது செல்போனில் பதிவு செய்யப்பட்டது என கூறப்படுகிறது. அந்த காட்சிகளை டுவிட்டரில் இருந்து நீக்க டெல்லி கோர்ட்டில் படதயாரிப்பு நிறுவனம் அணுகியது.
வழக்குப்பதிவு
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக படதயாரிப்பு நிறுவனம் சார்பில் மும்பை சாந்தாகுருஸ் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ஜவான் திரைப்பட காட்சிகள் சமூகவலைதளத்தில் கசியவிடப்பட்டது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.