மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு கடைபிடிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

பெரம்பலூர்:

கடைகள் மூடப்பட்டன

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 3-ம் அலை பரவலை கட்டுப்படுத்தவும், புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும் அரசின் உத்தரவின்படி 3-வது முறையாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு பெரம்பலூர் மாவட்டத்தில் கடைபிடிக்கப்பட்டது.

முழு ஊரடங்கையொட்டி பெரம்பலூர் நகர்ப்பகுதியில் மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்ததால் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் புறநகர்ப்பகுதிகள், கிராம பகுதிகளில் சில இடங்களில் இறைச்சி கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.

சாலைகள் வெறிச்சோடின

பொது, தனியார் போக்குவரத்துக்கு அனுமதி கிடையாததால் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படாததால் சாலைகளும் வெறிச்சோடி கிடந்தன. முழு ஊரடங்கில் அனுமதிக்கப்பட்டிருந்த அத்தியாவசிய பணிகள் வழக்கம்போல் நடைபெற்றன. உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் நடைபெற்றது. அம்மா உணவகம் வழக்கம் போல் செயல்பட்டது.

உணவு டெலிவரி செய்யும் மின் வணிக நிறுவனங்கள் இயங்கின. முழு ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் நேற்று சில பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனையும் நடைபெற்றது. மாவட்டத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்ததோடு, அபராதம் விதித்தனர். தூக்க காரியத்திற்கு சென்றவர்களை அனுமதித்தனர்.

பாக்ஸ் செய்திகள்

ஏராளமான திருமணங்கள் நடந்தன

தை மாதத்தில் முதல் சுபமுகூர்த்த நாள் நேற்று என்பதால் மாவட்டத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. வழிபாட்டு தலங்களான கோவில்கள் மூடப்பட்டுள்ளதால், வெளியே கோவிலின் வாசல் முன்பு சில திருமணங்கள் எளிய முறைப்படி நடந்தது. பெரும்பாலான திருமணங்கள் மண்டபங்களில் நடந்தன. அவற்றில் குறைவான நபர்களே கலந்து கொண்டனர். திருமணத்திற்கு சென்றவர்களிடம் போலீசார் அழைப்பிதழை காண்பிக்க கூறினர். மேலும் வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் நடந்தன.

பக்தர்களின்றி வருசாபிஷேகம்

பெரம்பலூர் மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோவிலின் 9-ம் ஆண்டு வருசாபிஷேக விழா நேற்று முழு ஊரடங்கால் பக்தர்களின்றி நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பெருமாள் மற்றும் தாயார் உற்சவர்-மூலவருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.