அரியாங்குப்பம்
தவளக்குப்பம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் இளந்தமிழன், சுந்தரமூர்த்தி, மணிவண்ணன் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். நல்லவாடு ரோடு பகுதியில் உள்ள தனியார் கண்ணாடி கம்பெனி அருகே ரோந்து சென்றபோது இருட்டான பகுதியில் மறைந்து இருந்தவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் அரியாங்குப்பம் மணவெளி சுடலை தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 34) என்பதும், ரவுடியான இவர் மீது ஏனாம் சிறைக்குள் புகுந்து கைதியை கொல்ல முயன்ற வழக்கு, திருட்டு, கொலை மிரட்டல் மற்றும் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசனை கைது செய்து, கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.