மாவட்ட செய்திகள்

குறைதீர்வு நாள் கூட்டத்தில் பிளேடால் கழுத்தை அறுக்க முயன்ற விவசாயி

நிலத்தை மீட்டுத் தரக்கோரி விவசாயி பிளேடால் கழுத்தை அறுக்க முயன்ற சம்பவத்தால் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

நிலத்தை மீட்டுத் தரக்கோரி விவசாயி பிளேடால் கழுத்தை அறுக்க முயன்ற சம்பவத்தால் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் பேபிஇந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் குறைகள், கோரிக்கைகளை மனுவாக எழுதி மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தியிடம் வழங்கினர். முகாமில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

தற்கொலைக்கு முயன்ற முதியவர்

கூட்டத்தில், ஒடுகத்தூர் அருகே உள்ள அத்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தருமன் (வயது 70) என்பவர் மனைவியுடன் மனு கொடுக்க வந்தார். அப்போது அவர் திடீரென பையில் மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து தனது கழுத்தை அறுக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் விசாரணை நடத்தினார். அப்போது தருமன் கூறியதாவது:-

எனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை உறவினர் ஒருவர் பட்டா மாற்றம் செய்து வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். அந்த நிலம் எனது பெயரில் இல்லை என்று வருவாய்துறையினர் கூறுகின்றனர். அதனால் நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கக்கோரி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நகைக்கடன் தள்ளுபடி

குடியாத்தம் நெல்லூர்பேட்டை பாவோடும்தோப்பு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் காந்தி வேடம் அணிந்த ஈரோடு சண்முககாந்தி என்பவருடன் மனு கொடுக்க வந்தனர். அதில், பாவோடும்தோப்பு கவுண்டன்ய ஆற்றங்கரையில் நீர்வரத்து பகுதிகளில் உள்ள வீடுகளை இடித்து வருகின்றனர். வீடுகளை இடிப்பதால் மாணவ- மாணவிகளின் கல்வி பாதிக்கும். எனவே இந்த கல்வியாண்டு முடியும் வரையில் வீடுகளை இடிக்க கூடாது என்று கூறியிருந்தனர்.

வேலூரை அடுத்த கீழ்மொணவூரை சேர்ந்த இலங்கை தமிழர் குடியிருப்பை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்துள்ளது. இந்த திட்டத்தில் எங்களுடைய பெயர்கள் விடுபட்டுள்ளன. 5 பவுனுக்கு குறைவாக நகைகள் வைத்து கடன் பெற்ற அனைவரின் நகை கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இடத்தை மீட்டுத்தர வேண்டும்

பாட்டாளி மக்கள் கட்சி வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நெசவாளர்கள் அளித்த மனுவில், குடியாத்தம் தனியார் லுங்கி கம்பெனி, நெசவாளர்களுக்கு 30 சதவீதம் கூலியை உயர்த்தி வழங்க வேண்டும். இதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வேலூரை அடுத்த கந்தனேரியை சேர்ந்த மூதாட்டி லட்சுமி (70) அளித்த மனுவில், எனது கணவர் கண்ணன் 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனக்கு 3 மகள்கள் உள்ளனர். அதில், 2 மகள்கள் நான் வசிக்கும் இடத்தை பறித்துவிட்டு விரட்டி விட்டனர். அந்த இடத்தை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.