புதுச்சேரி
குடும்ப தலைவிகளுக்கான ரூ.1,000 உதவித்தொகை இதுவரை ஒரு மாதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுகாதாரத்துறை மெத்தனம்
புதுவை புதிய சட்டமன்றம் கட்டுவது தொடர்பான நில ஆர்ஜித விவகாரத்தில் சபாநாயகர் செல்வம் தவறான தகவல்களை கூறி வருகிறார். நில உரிமையாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படிதான் நிலம் திருப்பி தரப்பட்டது. சபாநாயகர் செல்வம் தனது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுதொடர்பான கோப்புகளை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்ப வேண்டும்.
சுகாதாரத்துறையின் மெத்தனத்தால் டெங்கு காய்ச்சலுக்கு 2 உயிர்கள் பலியாகி உள்ளது. உயிர்பலி ஏற்பட்டபின் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்கிறோம் என்கிறார்கள். இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காதது ஏன்? மாகியில் நிபா வைரஸ் பரவலை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த காங்கிரசாரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு மாத உதவித்தொகை
புதுவையில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் அறிவிக்கப்பட்ட ரூ.1,000 உதவித்தொகை திட்டம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கினார்கள். திட்டம் தொடங்கி 9 மாதம் ஆன நிலையில் இதுவரை ஒரே ஒருமாதம் மட்டுமே ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டது. அதன்பின் வழங்கப்பட வில்லை. இதனால் குடும்ப தலைவிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். தற்போது 73 ஆயிரம் மனுக்கள் பரிசீலனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் கவர்னர் தவறான தகவல்களை கூறி தமிழக அரசை விமர்சிக்கிறார்.
புதுவையில் மிரட்டி மாமூல் வசூலிக்கும் கூட்டம் பெருகி வருகிறது. இந்த கூட்டம் சட்டசபை வளாகத்தை சுற்றி வருகிறது.
போலீசார் மிரட்டல்
மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழும் கூட்டம் புதுவையில் அதிகமாக உள்ளது. இதற்காக காவல்துறைக்கு மாதந்தோறும் முறையாக மாமூல் செல்கிறது. லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது.
மதுபான கடை வேண்டாம் என்று போராடுபவர்களை போலீசார் அடித்து துன்புறுத்துகின்றனர். இதுதான் ஜனநாயக ஆட்சியா? போராட்டம் செய்பவர்களை அதிகார துஷ்பிரயோகம் செய்து காவல்துறையினர் மிரட்டுகின்றனர். நாடாளுமன்ற தேர்தலின்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.