மாவட்ட செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.91½ லட்சம் தங்கம் பறிமுதல் பெண் உள்பட 12 பேரிடம் விசாரணை

சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த ரூ.91½ லட்சம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக மலேசிய பெண் உள்பட 12 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த தமிமுல் அன்சாரி(வயது 29), கிதார் நைனா முகமது (48), அப்துல் மாலிக்(49), பக்ருதீன் (49), குரேசினா முகமது (38), சதாம் உசேன் (27) ஆகியோர் குழுவாக இலங்கைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியதை கண்டனர்.

சந்தேகத்தின் பேரில் 6 பேரையும் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அதில் 6 பேரும் தங்கள் உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 6 பேரிடம் இருந்தும் ரூ.42 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 300 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சுற்றுலா வந்த மலேசியாவை சேர்ந்த பெண் சாந்தா(42), குமார்(45), பாலமுத்து(42) மற்றும் சென்னையை சேர்ந்த தமீம் அன்சாரி (48), அஜீஸ் கான்(28), ராமநாதபுரத்தை சேர்ந்த அஜீஸ் அலி(44) ஆகியோரை நிறுத்தி உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் எதுவும் இல்லை. 6 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதித்தனர். அப்போது பெண் உள்பட 6 பேரும் உள்ளாடைக்குள் தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.49 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 500 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொழும்பு மற்றும் மலேசியாவில் இருந்து வந்த மலேசிய பெண் உள்பட 12 பேரிடம் இருந்து ரூ.91 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 800 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். பிடிபட்ட 12 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.