புதுச்சேரி

இரு சக்கர வாடகை வாகன கடைக்காரர்கள் மீது நடவடிக்கை

போக்குவரத்து இடையூறாக நிறுத்தினால் இருசக்கர வாடகை வாகன கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி

போக்குவரத்து இடையூறாக நிறுத்தினால் இருசக்கர வாடகை வாகன கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் எச்சரித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி நேரு வீதியில் உள்ள கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மாறன் பேசியதாவது:-

புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வாடகைக்கு இருசக்கர வாகனங்களை எடுக்கும் சுற்றுலா பயணிகள் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.

கடற்கரை சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடாது. ஒருவழி பாதையான நேரு வீதி, கொசக்கடை வீதி, ரங்கபிள்ளை வீதியில் போகக்கூடாது என்பது உள்பட அமலில் இருந்து வரும் போக்குவரத்து நடைமுறைகள் குறித்து அவர்களுக்க விளக்கவேண்டும்.

எச்சரிக்கை

நகரில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் கடைகள் முன்பு ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே ஒரு கடை முன்பு 3 வாகனங்கள் மட்டுமே நிறுத்த வேண்டும். மீதமுள்ள வாகனங்களை குடோன்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கை வருகிற 2-ந் தேதி முதல் மேற்கொள்ளப்படும்.

இன்னும் 3 மாதத்திற்குள் 19 சிக்னல்கள் நவீனமயமாக்கப்படும். அங்கு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.