கொள்ளேகால்:
சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை வனப்பகுதியில் இருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக கனிமப்பொருட்கள் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சாம்ராஜ்நகர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் குருபிரசாத் கூறியதாவது:- குண்டலுபேட்டையில் உள்ள கல்குவாரியில் அனுமதி பெற்றுள்ள நிறுவனங்களை தவிர சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகளில் கற்கள் உள்ளிட்ட கனிமப்பொருட்கள் கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கு கடத்தி செல்லப்படுகிறது.
இது சட்டவிரோத செயல். கர்நாடகத்தில் இயற்கை வளத்தை சுரண்டி, வெளிநாடுகளுக்கு தாரை வார்ப்பது எந்த விதத்தில் நியாயம். வேலை காரணமாக இங்கு தங்கியிருக்கும் அவர்கள் கலவரத்தை துண்டும் செயலிலும் ஈடுபடுகின்றனர். இதனால் ஒற்றுமை சீர்குலைந்து காணப்படுகிறது. எனவே, சட்டவிரோதமாக செயல்படும் கல்குகுவாரியை மூட மாநில அரசு முன்வரவேண்டும். இதுதொடர்பாக விரைவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.