தெலுங்கு இளம் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் நல்ல வசூலும் பார்த்தது. இந்த படம் தமிழிலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். பகத் பாசில், தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வந்தனர். புஷ்பா படத்தில் சமந்தா ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். இந்த பாடலும் பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் புஷ்பா படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அல்லு அர்ஜுன் சம்பளத்தை இரு மடங்கு உயர்த்தி விட்டதாக தெலுங்கு சினிமா உலகில் பேசப்படுகிறது. இதுவரை ஒரு படத்துக்கு ரூ.50 கோடி சம்பளம் வாங்கினார். இப்போது ரூ.100 கோடி கேட்கிறார் என்கிறார்கள். ஏற்கனவே தெலுங்கு நடிகர் பிரபாஸ் பாகுபலிக்கு பிறகு முன்னணி நடிகராக உயர்ந்து சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.