மும்பை,
குஜராத் சட்டசபை தேர்தலுக்கு பின்னர், நாட்டில் எதிர்க்கட்சிகள் வலுப்பெறும் என்று மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று தனியார் சேனல் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:
நாட்டில் எதிர்க்கட்சிகள் சற்று பலவீனமாக இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், குஜராத் சட்டசபை தேர்தலுக்கு பின்பு, எதிர்க்கட்சிகள் வலிமை அடையும். எதிர்க்கட்சியில் கண்ணுக்கு புலனாக கூடிய மாற்றங்கள் வரும். ஒரு மாநிலத்தில் (குஜராத்) சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் உள்பட பெரும்பாலான மந்திரிகள் பிரசாரம் மேற்கொள்வதை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.
அது பிரதமரின் சொந்த மாநிலமாக இருந்தாலும், நாட்டின் தலைவர் ஒரு மாநிலத்துக்காக பிரசாரம் மேற்கொள்வது நல்லது அல்ல. குஜராத்தில் பாரதீய ஜனதா தலைமையிலான அரசு நற்பணிகளை செய்து இருந்தால், அங்கு பிரசாரத்துக்காக ஏராளமான மந்திரிகளை களமிறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர், மத்திய அரசு ஏராளமான கரன்சி நோட்டுகளை அச்சிட்டது. இதன் மூலம் பா.ஜனதா பயன் அடைந்தது. பா.ஜனதாவை தவிர, வேறு எந்த கட்சியிடமும் அதிகப்படியான நிதி கிடையாது. அவர்களுக்கு மட்டும் எவ்வாறு இவ்வளவு நிதி வருகிறது? என்று பொதுமக்கள் கேள்வி கேட்கட்டும்.
இவ்வாறு ராஜ் தாக்கரே தெரிவித்தார்.