அ.தி.மு.க. பேனர் கிழிப்பு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து எண்ணூர் தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் உள்பட 6 மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தாழங்குப்பம் மார்க்கெட் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அ.தி.மு.க. பேனரை சிலர் கிழித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து எண்ணூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெட்டுக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக லட்சுமிபதி, லிங்கேசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை எண்ணூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அ.தி.மு.க. பேனரை கிழித்த உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். மீனவர்கள் மீது போடப்பட்டு உள்ள பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று கூறி அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகையில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து மீனவ கிராம பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.