மாவட்ட செய்திகள்

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநகராட்சி கூட்டம்

வேலூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்றபின் முதல் சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். துணை மேயர் சுனில்குமார், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கதிர்ஆனந்த் எம்.பி., கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் சொத்து வரி உயர்வை கண்டித்து கருப்பு நிற உடையில் வந்திருந்தனர்.

கூட்டம் தொடங்கும்போது மேயர் சுஜாதா, ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளின் பெயரை கூறி நன்றி தெரிவித்தார். பின்னர் கூட்டத்தின் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

வெண்கலச்சிலை

அப்போது கவுன்சிலரும் 1-வது மண்டல குழுத் தலைவருமான புஷ்பலதா வன்னியராஜா கூறுகையில், அனைத்து நிர்வாகிகளின் பெயர்களையும் தெரிவித்து நன்றி தெரிவித்தீர்கள். மாநகராட்சியில் 17 வார்டுகளை உள்ளடக்கிய அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஜெகத்ரட்சகன் பெயரை தெரிவிக்கவில்லை. அவரது பெயரும் இடம்பெறவில்லை என்றார்.

அதற்கு மேயர் சுஜாதா பதிலளித்து பேசுகையில், அடுத்த கூட்டத்தில் இது சரிசெய்யப்படும். நிர்வாக ரீதியான தவறு நடந்துள்ளது என்றார்.

இதையடுத்து முதல் தீர்மானமாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வேலூர் மாநகரின் மையப்பகுதியில் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவ வேண்டும் என வாசிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வரிசை எண்கள் மட்டும் வாசிக்கப்பட்டது. மொத்தம் 111 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவித்தார். இதையடுத்து கூட்டத்தின் முடிவில் மேயர், அரக்கோணம் எம்.பி.யின் பெயரை கூறி நன்றி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் 57 உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். 3 பேர் வரவில்லை. கூட்டம் ஆரம்பித்த அரை மணிநேரத்துக்குள்ளாகவே கூட்டம் முடிவடைந்தது.

வெளிநடப்பு

முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். அவர்களுக்கு பின்னர் பா.ஜ.க. கவுன்சிலர் சுமதியும் வெளிநடப்பு செய்தார். அவர்கள் அனைவரும் மாநகராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.