மாவட்ட செய்திகள்

அமெரிக்க வாலிபர் விவகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 4 பேருக்கு போலீஸ் சம்மன்

அமெரிக்க வாலிபர் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 4 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் கடந்த மே மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது நடந்த கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இதுதொடர்பாக ஆலை தரப்பினர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றுவதற்கு சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியா ஓக்லாந்தை சேர்ந்த மார்க் சியல்லா (வயது 35) என்பவர் கடந்த 27-ந் தேதி தூத்துக்குடிக்கு வந்து, தனியார் ஓட்டலில் தங்கினார். அவர் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் சிலரை நேரில் சென்று சந்தித்தார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராமங்களுக்கு மார்க் சியல்லா சென்று மக்களை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மார்க் சியல்லாவிடம் விசாரணை நடத்தினர். நேற்று காலை முதல் மதியம் வரை தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரித்தனர். அதன்பிறகு அவர் தங்கி உள்ள ஓட்டல் அறையில் வைத்து விசாரித்தனர். அப்போது, மார்க் சியல்லாவின் மடிக்கணினி, கேமரா மற்றும் அவருடைய பல்வேறு ஆவணங்களையும் பரிசோதனை செய்தனர். இந்த விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது.

விசாரணையில், மார்க் சியல்லா தான் நிறுவனம் சாராத எழுத்தர் (பிரீ லேன்சர்) என்றும், குறும்பட இயக்குனர் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் மார்க் சியல்லா தூத்துக்குடியில் சந்தித்து பேசியதாக கூறப்படும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 4 பேரிடம் நேற்று விசாரணை நடத்துவதற்காக போலீசார் அழைப்பாணை (சம்மன்) அனுப்பி இருந்தனர். ஆனால், அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும் காலஅவகாசம் கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலை நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் சுற்றுலா தலம் ஆகும். அமெரிக்க வாலிபர் எதற்காக வந்தார், என்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளார், குறிப்பாக கடந்த ஒரு வாரமாக அவர் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உண்மையிலேயே அவர் விசா விதிமுறையை மீறி உள்ளார் என்று சரியான ஆதாரங்கள் இருந்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.