வேகமாக பரவும் கொரோனா
புதுவை மாநிலத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. நகர பகுதிக்கு இணையாக கிராமப்புறங்களிலும் தொற்று வேகமாக பரவுகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும், தொற்று பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை.பாகூர் தாலுகாவில் கொரோனாவால் நேற்று வரை சுமார் 1500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,347 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
71 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டன
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட 71 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது மணப்பட்டு, இருளன்சந்தை, குடியிருப்புபாளையம், சேலியமேடு, அரங்கனூர், கிருமாம்பாக்கம் பேட், பிள்ளையார்குப்பம், குருவிநத்தம், கரையாம்புத்தூர் நேருநகர், சூரமங்கலம், செம்பியம்பாளையம், ஏம்பலம் புதுநகர், கல்மண்டபம், கோர்க்காடு, நத்தமேடு, நெட்டப்பாக்கம் ஆகிய பகுதிகளில் பல தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்கவும், தேவையான உதவிகள் செய்யவும் அரசு சார்பில் அதிகாரிகள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக தாசில்தார் சுரேஷ்ராஜ் தெரிவித்து உள்ளார்.
காட்டுக்குப்பம் கிராமத்தில் தொற்று அதிகரித்து வருவதால் தேவை இல்லாமல் யாரும் ஊருக்குள் நுழையாமல் இருக்கவும், இங்கிருந்து வெளியே செல்ல முடியாத வகையிலும் அப்பகுதி இளைஞர்கள் சாலையின் குறுக்கே கயிறு கட்டியும், பலகைகளை வைத்தும் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.