மாவட்ட செய்திகள்

அஞ்செட்டி அருகே தையல் தொழிலாளியை கொலை செய்ய முயன்ற 2 பேர் கைது

அஞ்செட்டி அருகே தையல் தொழிலாளியை கொலை செய்ய முயன்ற 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி அடுத்த பேல்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45). தையல் தொழிலாளி. இவரது மனைவி கங்கம்மா. இவர் குடும்ப தகராறு காரணமாக பெங்களூருவில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். தனது மனைவியை வீட்டிற்கு வருமாறு சிவக்குமார் நேரில் சென்று அழைத்துள்ளார். ஆனால் அவருடன் செல்ல கங்கம்மா மறுத்து விட்டார். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி சிவக்குமாரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்ய முயன்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கங்கம்மாவின் கள்ளக்காதலன் ரவி, பெங்களூரு கனகபுரா பகுதியை சேர்ந்த முனிராஜ் (29) ஆகியோர் சிவக்குமாரை கொலை செய்ய முயன்றது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.