மாவட்ட செய்திகள்

இருளர் இன சான்று கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

இருளர் இன சான்று கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

நாமக்கல்:

நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு சாதி சான்றிதழ் கேட்டு நேற்று இரவு பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதால் சமரசம் அடைந்தனர்.

சாதிச் சான்று

ராசிபுரம் தாலுகா கார்கூடல்பட்டி, செல்லியம்பாளையம், உரம்பு, கர்லாகாடு, நாரைகிணறு உள்ளிட்ட பகுதிகளில் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், இலவச வீட்டுமனை பட்டா, சாதி சான்று கேட்டு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துள்ளனர். சாதி சான்று கோரி விண்ணப்பித்த பள்ளி மாணவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், பெரும்பாலானோருக்கு வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

அதனால் பள்ளி மாணவர்கள் அரசு திட்டங்களை பெற முடியவில்லை என்றும், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில் சாதி சான்று கேட்டு பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் என 50-க்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று பிற்பகலில் மனு அளிக்க வந்தனர். அப்போது கலெக்டர் கொல்லிமலைக்கு அரசு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டதாக அதிகாரிகள் கூறினர். அதன் பிறகு கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்துவிட்டு செல்வதாக கூறி கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டம்

பின்னர் மாலையில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனை சந்தித்து இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் சில மனுதாரர்கள் மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் சென்றனர். அப்போது மனு அளிக்க சென்றவர்களை மரியாதை குறைவாக நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த மனுதாரர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கண்ணன், சரவணன் ஆகியோர் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் இரவு 8 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்தும், சாதிச் சான்று கேட்டும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் கூறியதையடுத்து சமரசம் அடைந்த அவர்கள் மனுக்களை அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.