மாவட்ட செய்திகள்

ஆருத்ரா தரிசன விழா; நடராஜருக்கு தீப மை அணிவிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று நடந்தது. அப்போது தீப மை நடராஜருக்கு அணிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை,

ஆருத்ரா தரிசனம்

மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினம் ஆருத்ரா தரிசனம் என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சிவன்கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அதன்படி திருவண்ணாமலையில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அண்ணாமலையார் கோவிலில் ஆயிரம்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று காலை சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு தீபாராதனை நடந்தது.

நடராஜருக்கு தீப மை

அப்போது கடந்த மாதம் 12-ந் தேதி மகாதீபம் அன்று அண்ணாமலையார் மலைஉச்சியில் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மை நடராஜருக்கு அணிவிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருமஞ்சன கோபுரம் வழியாக நடராஜர் மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தீப மை பிரசாதம் இன்று (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து, கோவில் நிர்வாக அலுவலகத்தில் தீப மை பெற்றுக்கொள்ளலாம். நேரில் பெற முடியாதவர்களுக்கு தபால் மூலம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோவில் அதிகாரி தெரிவித்தார்.

ஆரணி

இதேபோல் ஆரணி கோட்டை கைலாயநாதர் சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று அதிகாலை சாமிக்கும், நடராஜ பெருமாள் சிவகாமி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மகா அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து உற்சவர் நடராஜ பெருமாள், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாடவீதிகள் வழியாக திருவீதி உலா நடைபெற்றது.

இதேபோல் ஆரணி புதுக்காமூர் பகுதியில் உள்ள ஸ்ரீபுத்திரகாமேட்டீஸ்வரர் சிவன் கோவிலிலும் சாமிக்கும், நடராஜ பெருமாளுக்கும் சிவகாமி அம்பாளுக்கும், மாணிக்கவாசகருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு மகா அலங்காரம் செய்யப்பட்டது. தீபாராதனைக்கு பின்னர் சாமி திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் வேதபுரீஸ்வரர் கோவில், அருணாசலேஸ்வரர் கோவில், பூமிநாதர் கோவில்களிலும் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது.