மாவட்ட செய்திகள்

முதல்–அமைச்சர் காப்பீடு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படும்

முதல்–அமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

ஈரோடு,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. தமிழக அரசு சார்பில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் டெங்கு காய்ச்சல் நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக ஈரோட்டிற்கு நேற்று காலை வந்தார். அவர் ஈரோடு, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வார்டுகளிலும், குழந்தைகள் நல வார்டிலும் அமைச்சர்கள் சென்று பார்வையிட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை அவர்கள் கேட்டறிந்தனர். மேலும், சுகாதாரமான முறையில் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர். அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்.

ஈரோடு செங்குந்தர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் டெங்குநோய் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்துக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசும்போது, தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் பாராட்டியுள்ளது. எந்தவொரு மாநிலங்களிலும் இல்லாத சிறந்த மருத்துவ திட்டங்களை தமிழக அரசு மக்களுக்காக செய்து வருகிறது. ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.11 கோடியே 28 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ரத்த சுத்திகரிப்பு உள்பட பல்வேறு கருவிகள் வாங்கப்படும், என்றார். அதைத்தொடர்ந்து சுகாதார உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

செங்குந்தர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டு தனித்தனி குழுவாக பிரிந்து மாநகராட்சியில் உள்ள முக்கிய வீதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

முன்னதாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. காய்ச்சல் ஏற்பட்டால் டெங்குவாக இருக்கும் என்று மக்கள் பயப்பட வேண்டியதில்லை. அவர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே டெங்கு தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது. அதிலும் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழகத்தில் 100 சதவீதம் உயிரிழப்பு இல்லாத நிலையை உருவாக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 5 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். டெங்கு என்பது குணப்படுத்தக்கூடிய காய்ச்சல் தான். எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டியதில்லை.

காய்ச்சல் ஏற்பட்டால் மக்கள் அருகில் உள்ள மருந்துக்கடைக்கு சென்று மாத்திரைகளை வாங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். இதேபோல் தனியார் ஆஸ்பத்திரிக்கும் சென்று ஏமாற வேண்டாம். ஈரோடு மாவட்டத்திலேயே சமீபத்தில் 5 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

முதல்அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றால் எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடஒதுக்கீடு 60 சீட்டில் இருந்து 100 சீட்டாக உயர்த்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர்கள் குழந்தைசாமி, பானு, கலெக்டர் எஸ்.பிரபாகர், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் கனகாச்சலகுமார், துணை இயக்குனர்கள் பாலுசாமி, கனகராஜ், ரமாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.