குடிநீர் தட்டுப்பாடு
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது ராமச்சந்திராபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் சிக்கனூத்து, மூலனூர் பிரிவு, நஞ்சேகவுண்டன்புதூர், ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. ராமச்சந்திராபுரம் ஊராட்சியில் சுமார் 4 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்கள் அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகிறது. மேலும், இங்குள்ள சில ஆழ்குழாய் கிணறுகள் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கடைக்கோடி கிராமமாக உள்ளதாலும், மக்கள் தொகை அதிகரித்து விட்டதன் காரணமாகவும், கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்படும் உடைப்பு காரணமாகவும் போதுமான குடிநீர் கிடைக்காமல் ராமச்சந்திராபுரம் பகுதியில் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், 20 நாட்களுக்கு ஒரு நாள் மட்டுமே குடிநீர் வருகிறது. அதுவும் போதுமானதாக இல்லை.
சாலை மறியல்
எனவே சீராக குடிநீர் கிடைக்க வேண்டும் என கேட்டு ராமச்சந்திராபுரத்தில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் குடிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஓம்பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அகமது ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக குடிமங்கலம் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் பயன்பெற்று வருகிறது.
இந்த நிலையில் திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு அணிக்கடவு ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் செலுத்தி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அடிபம்புகள் சரி செய்யப்பட்டு கிராம மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். மூலனூர் பிரிவில் உள்ள ஆழ்குழாய் கிணறு தூர்வாரப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாலை மறியலால் அந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதியில் பஸ் உள்பட வாகனங்கள் இருபுறமும் நீண்ட தூரம் காத்து நின்றன.