சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினம் வானியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் ஒரு அதிசயமான நாள். வானத்தில் நிலவு முழு பொலிவுடன் பூமிக்கு மிக அருகில் வந்து காட்சி தரும் அற்புதமான நாள் இது. அவ்வகையில் இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி இன்று (வெள்ளிக்கிழமை) வருகிறது. பௌர்ணமி திதியானது நேற்று (வியாழக்கிழமை) இரவு 9.12 மணிக்கு தொடங்கியது. இன்று இரவு 10.52 மணிக்கு முடிகிறது.
சந்திரனும் சூரியனும் முழு பலன் பெற்று விளங்கும் இந்த நாளில் இறைவனை வழிபட்டால் வாழ்வில் பெரும் மாற்றங்கள் உருவாகும் என்பது ஐதீகம். மற்ற மாதங்களில் வரக்கூடிய பௌர்ணமிகளைவிட சித்ரா பௌர்ணமி சிறப்பு வாய்ந்தது. தெரியாமல் செய்த பாவங்கள் தவிடுபொடியாகும் நாள் சித்ரா பௌர்ணமிதான். இந்த நாளில் நாம் தெரியாமல் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டால் கண்டிப்பாக பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது ஐதீகம்.
குறிப்பாக வாழ்வின் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் சித்திரகுப்தரை வழிபட வேண்டிய மிக முக்கியமான நாள் இது. நவக்கிரகங்களில் ஒன்றான கேதுவுக்குரிய பிரத்யேக தேவதையாக சித்ரகுப்தரைக் கூறுவர். சித்ரா பௌர்ணமி நாளில் சித்ரகுப்தரை அர்ச்சித்து பூஜை செய்தால், கேது கிரகத்தால் விளையும் தீமைகள் குறையும்.
ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒரு வகையான விசேஷ பூஜை முறையை காரணாகமம் சொல்லி இருக்கிறது. அவ்வகையில் சித்ரா பௌர்ணமி அன்று மேற்கொள்ளும் ஒரு விரதம் சித்ர குப்த விரதம். விரதம் இருப்பவர்கள் இந்த நாளில் ஒருவேளை உணவிலாவது உப்பை தவிர்த்தால் தீராத கர்ம வினைகள் கூட தீரும் என்பது ஐதீகம். அதேபோல் சித்ரகுப்தருக்கு உப்பு இல்லாத தயிர் சாதம் படைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
சித்ரகுப்த விரதத்தின்போது காலையில் வீட்டில் மாக்கோலமிட்டு, ஏடு, எழுதுகோல் வைத்து, விளக்கேற்றி பூஜை செய்து சித்ரகுப்தரை வழிபட வேண்டும். அதோடு சர்க்கரைப் பொங்கல் படைத்தும், பயத்தம்பருப்பு, எருமைப்பால் சேர்த்து பாயசம் செய்து நைவேத்தியம் படைக்கவேண்டும். விரதத்தின்போது பசும்பால், நெய், தயிர் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
இந்த நாளில் செய்யப்படும் தானங்கள் பல மடங்கு புண்ணியத்தை தேடித்தரும் என்பது ஐதீகம். எனவே, தங்களின் சக்திக்கு ஏற்ப முடிந்த அளவிற்கு தான தர்மங்களை செய்வது நல்லது. ஏழைகளுக்கு உதவி செய்தல், அன்னதானம் வழங்குதல், ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்தல் போன்ற நற்காரியங்களை செய்யலாம்.
சித்ரா பெளர்ணமி தினத்தில் காலையில் விரதத்தை தொடங்கி, இரவு முழு நிலவை பார்த்து தரிசனம் செய்து, சித்ரகுப்தனுக்கு பூஜை செய்து வழிபட்டு பின்னர் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். சித்ரகுப்தரை நினைத்து விரதமிருப்பதாலும், ஏழை, எளியோருக்கு உதவி செய்வதாலும் பாவங்கள் குறையும், புண்ணியங்கள் அதிகரிக்கும் என்பது ஐதீகம்.