முருகப்பெருமான் 
விரத நாட்கள்

நாளை கார்த்திகை விரதம்.. பாசிப்பருப்பு பாயசம் படைத்து முருகப்பெருமானை வழிபடலாம்

நாள் முழுவதும் உணவு அருந்தாமல் முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதத்தை தொடரலாம்.

முருகப்பெருமானை வழிபடும் முக்கிய விரத நாட்களில் ஒன்று கார்த்திகை விரதம். முருகப்பெருமானை வளர்த்ததால் சிறப்பு பெற்ற கார்த்திகை பெண்களின் நட்சத்திர நாளான கிருத்திகை நட்சத்திரத்தன்று பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவது வழக்கம்.

அவ்வகையில் மாசி மாத கார்த்திகை விரதம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

விரதம் இருப்பவர்கள், நாளை காலை எழுந்தவுடன் குளித்துவிட்டு முருகப்பெருமானை வழிபட்டு விரதத்தை தொடங்கவேண்டும். விரத நாளில் பாராயணம், தியானம், கோவில் வழிபாடு மேற்கொள்ளலாம். மறுநாள் காலையில் நீராடி முருகனை வழிபட்டு அதன்பிறகு உணவு அருந்தி விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.

விரதத்தை முறையாக கடைப்பிடிக்கும் பக்தர்கள் முந்தைய நாளான பரணி நட்சத்திர நாளில் நண்பகல் உணவு எடுத்துக்கொண்டு விரதத்தை தொடங்குவார்கள். கார்த்திகைக்கு முதல் நாளில் தொடங்கி, கார்த்திகைக்கு மறுநாள் வரை விரதம் தொடரும் முறையே சிறந்தது என்கிறார்கள் ஆன்மிக பெரியோர்கள்.

பாசிப்பருப்பு பாயசம் நைவேத்யம்

கார்த்திகை தினமான இன்று முருகப்பெருமானுக்கு பாசிப்பருப்பு பாயசம், இனிப்புகள், பழங்கள் படைத்து வழிபடலாம். நாள் முழுவதும் உணவு அருந்தாமல் முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், பசி தாங்க முடியாதவர்கள், உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதத்தை தொடரலாம்.

விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று முருகப்பெருமானை வழிபடுவதும் மிகுந்த பலனை தரும். வீட்டில் பாசிப்பருப்பு பாயசம் செய்து முருகப்பெருமானுக்கு படைக்கலாம்.

செவ்வாயின் அதிபதியாக முருகப்பெருமாள் விளங்குவதால், அவரை வழிபட்டால் செவ்வாய் பகவானால் ஏற்பட்ட சிக்கல்கள், செவ்வாய் தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை பெண்களுக்கு சிறப்பு

கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினை பெற்றனர். கார்த்திகை பெண்களை பாராட்டிய சிவபெருமான், அவர்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான் என்றும், கார்த்திகை பெண்களின் நட்சத்திர நாளான கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்றும் கூறி ஆசீர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் அருளை பெறுகிறார்கள்.

SCROLL FOR NEXT