கரூர் 
மாவட்ட செய்திகள்

பெற்றோர்களுக்கு தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

மாணவர்கள் வீடுகளில் போக்குவரத்து காவலர்கள் போல் செயல்பட்டு பெற்றோர்களுக்கு தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.

கரூர்,

விழிப்புணர்வு நிகழ்ச்சி

கரூர் மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோர்கள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும் என தங்களது பெற்றோர்களுக்கு கடிதம் எழுதும் தலை காக்கும் இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நான்கு சக்கர வாகனம் எளிதாக சாய்ந்து விடாது. ஆனால் இரண்டு சக்கர வாகனம் எதிரே உள்ள வாகனம் மீதோ அல்லது வேறு ஏதாவது ஒரு பொருள் மீது மோதும் போது எளிதாக சாய்ந்துவிடும். அவ்வாறு சாயும் போது உடலின் மிக முக்கிய பகுதியான தலையில் அடிபட்டு உயிர் சேதம் ஏற்படுகிறது அல்லது வாழ்நாள் முழுவதும் சுயநினைவு இல்லாத அளவிற்கு போய்விடுகிறது. இதைத் தடுப்பதற்காக வருகிற 18-ந்தேதி முதல் தலை காக்கும் இயக்கம் மூலம் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகள், அரசு அலுவலகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், அரசு மதுபான கடைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்படும். அவ்வாறு தலைக்கவசம் அணிந்து வராதவர்களுக்கு சேவை அளிக்கப்படமாட்டாது.

பெற்றோர்களிடம் கையொப்பம்

அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 52 ஆயிரம் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களுக்கு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களாகிய நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்கு தங்கள் கைப்பட அப்பா நீங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர் உங்களால் தான் எங்களுக்கு எதிர்காலம் இருக்கிறது. என்னை உங்களுக்கு பிடிக்கும் என்றால் சிறிய தூரமோ, நீண்ட தூரமோ இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள் என்று கடிதம் எழுதி அதை அவர்களுக்கு படித்துக் காட்டி நான் படித்து தெரிந்துகொண்டேன் என்று கையொப்பம் பெற்று வாங்கி வந்து நீங்கள் படிக்கும் வகுப்பறையின் சுவர்களில் ஒட்ட வேண்டும்.

1 லட்சம் பேருக்கு மேல்...

இதன் மூலம் குறைந்தபட்சம் 1 லட்சம் பேருக்கு மேல் விழிப்புணர்வு ஏற்படுத்தி தலைக்கவசம் அணிய வைக்கலாம். மேலும் மாணவ, மாணவிகள் நீங்கள் தங்கள் வீடுகளில் போக்குவரத்து காவலர்களை போலவே செயல்பட்டு இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும் உங்கள் தாய், தந்தை, சகோதர, சகோதரிகளுக்கு தலைக்கவசத்தின் அவசியத்தை எடுத்துச் சொல்லுங்கள் நாள்தோறும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்..

முன்னதாக கலெக்டர் விபத்தின்போது தலைக்கவசம் எவ்வாறு பயன்படுகிறது என்பது குறித்த செயல்முறை விளக்கம் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.