மாவட்ட செய்திகள்

கடையம் அருகே பரிதாபம்; வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் சாவு

கடையம் அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

5-ம் வகுப்பு மாணவன்

கடையம் அருகே முதலியார்பட்டி 5-வது தெரு காந்தி நகரைச் சேர்ந்தவர் காஜா முகைதீன். சமையல் தொழிலாளி. இவருடைய மகன் முகம்மது அமீர் (வயது 10). இவன் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.பொங்கல் பண்டிகை தினத்தன்று முகம்மது அமீர் வீட்டின் மாடியில் நின்று விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன் எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி விழுந்தான்.

பரிதாப சாவு

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவனை சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவில் முகம்மது அமீர் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்த புகாரின்பேரில், கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.