மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் ஐக்கிய ஜனதா தளம் மாநில தலைவர் பேட்டி

தமிழகத்தில் மீண்டும் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் ராஜசேகரன் கூறினார்.

திருச்சி,

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் ராஜசேகரன் திருச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை தேர்தல்

சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. 122 எம்.எல்.ஏ.க்களை தொகுதிக்கு சென்று மக்களிடம் கருத்து கேட்டபின் தான் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தியிருக்க வேண்டும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்காக தான் மக்கள் வாக்களித்தனர். ஜெயலலிதா மறைந்த பின் சசிகலா தரப்பின் ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. ஜெயலலிதா அடையாளம் காட்டிய ஓ.பன்னீர்செல்வத்தை தான் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அ.தி.மு.க. அரசை கலைத்து விட்டு தமிழகத்தில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும். யாரை வேண்டுமானாலும் முதல்-அமைச்சராக மக்கள் தேர்ந்தெடுத்து கொள்வார்கள்.

போராட்டத்திற்கு ஆதரவு

தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடுவதை விட பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு துறையில் வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். சட்டசபையில் நடந்த ஜனநாயக படுகொலையை கண்டித்து இன்று (புதன்கிழமை) தி.மு.க. நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ராஜசேகரன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் வையாபுரி, மகேஸ்வரி, ஹேமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.