பெங்களூரு

தொழில் அதிபரை அலைக்கழித்த வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம்

கடன் கொடுப்பதாக நம்ப வைத்து தொழில் அதிபரை அலைக்கழித்த வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து ஹாசன் நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

ஹாசன்:-

தொழில் அதிபர்

ஹாசன் மாவட்டம் அரிசிகெரே டவுனில் வசித்து வருபவர் விஸ்வநாத். இவர் புதிதாக பி.யூ. கல்லூரி ஒன்றை தொடங்கினார். அங்கு வகுப்பறை கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிதாக வகுப்பறை கட்டிடங்கள் கட்ட அவர் அரிசிகெரே டவுனில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.1.90 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்தார்.

அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி அதிகாரிகள் 2 முறை நேரில் வந்து ஆய்வு செய்துவிட்டு சென்றனர். மேலும் இந்த கடனுக்காக தொழில் அதிபர் விஸ்வநாத், தனக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்பிலான அசையாக சொத்துக்களை உத்தரவாதமாக வழங்கினார்.

கடன் கொடுக்க மறுத்தனர்

ஆனால் வங்கி அதிகாரிகள் பின்னர் கடன் கொடுக்க மறுத்தனர். இதுதொடர்பான காரணத்தையும் அவர்கள் சரியாக கூறவில்லை. இதனால் மனமுடைந்த தொழில் அதிபர் விஸ்வநாத், இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் கேட்டார். ஆனால் அவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து தனக்கு கடன் கொடுக்க மறுத்தது குறித்து விளக்கம் அளிக்கவும், தன்னை அலைக்கழித்ததற்காக ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வங்கிக்கு உத்தரவிடவும் கூறி அரிசிகெரே நுகர்வோர் கோர்ட்டில் தொழில் அதிபர் விஸ்வநாத் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.

ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு

அவர் தனது தீர்ப்பில், தொழில் அதிபரை நம்ப வைத்து அலைக்கழித்ததற்காகவும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காகவும் பாரத ஸ்டேட் வங்கி ரூ.5 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டார்.

மேலும் இந்த தொகையை அவர் கடனுக்கான விண்ணப்பித்த தேதியில் இருந்து கணக்கிட்டு 10 சதவீத வட்டியுடன் 6 வாரங்களுக்குள் வழங்கிடவும் உத்தரவு பிறப்பித்தார். நீதிபதியின் உத்தரவால் வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் மேல்முறையீடு செய்யப்போவதாக

தெரிவித்துள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு