அரசூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மேலமங்கலம் கிராம ஏரியில் 100 கே.வி.ஏ. திறன் கொண்ட ஒரு மின்மாற்றியும், 200 கே.வி.ஏ. திறன் கொண்ட மின் மாற்றியும் உள்ளது. இந்த மின்மாற்றிகள் மூலம் அந்த பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் மின்மோட்டாரை இயக்கி, நிலத்தடி நீரை பெற்று விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகிறார்கள்.
தாமிர கம்பிகள் கொள்ளை
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் 2 மின்மாற்றிகளையும் மர்மநபர்கள் நிறுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் தடைப்பட்டது. இதனை தொடர்ந்து மர்மநபர்கள், 2 மின்மாற்றிகளையும் உடைத்து, அதில் இருந்த 500 லிட்டர் எண்ணெய்யை வெளியேற்றினர். பின்னர் அந்த மின்மாற்றிகளில் இருந்த 400 கிலோ தாமிர கம்பிகளை கொள்ளையடித்துச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.9 லட்சமாகும்.
விவசாயிகள் அதிர்ச்சி
இதற்கிடையில் வெகுநேரமாக மின்சாரம் இல்லாததால் விவசாயிகள் அனைவரும் நேற்று காலையில் ஒன்று திரண்டு மின்மாற்றிகள் இருந்த இடத்திற்கு வந்தனர். அங்கு மின்மாற்றிகள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர் பாக்கியராஜ், இளநிலை பொறியாளர் சீனிவாசன், விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மின்மாற்றிகளை பார்வையிட்டனர்.
பயிர்களுக்கு தண்ணீர்...
அப்போது விவசாயிகள் கூறுகையில், தற்போது கரும்பு, கம்பு, நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்வதற்காக நாற்றங்கால் தயார் செய்துள்ளோம். அதேபோல் மற்ற பயிர்களுக்கும் சுழற்சி முறையில் தண்ணீர் பாய்ச்சி வருகிறோம். மின்தடையால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. பயிர்கள் கருகுவதற்குள் புதிய மின்மாற்றிகளை அமைத்து மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும் என்றனர்.
அதற்கு மின்வாரிய அதிகாரிகள், புதிய மின்மாற்றிகள் வைக்க ஒரு வாரத்திற்கு மேல் ஆகி விடும். இருப்பினும் விவசாயிகளின் நலன் கருதி விரைவில் மின்மாற்றிகள் அமைக்கப்படும் என்றனர். இது தொடர்பாக திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.