தங்கம்

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன...?

வெள்ளி விலை சரிவு இனிவரும் நாட்களிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்து, கடந்த 29-ந்தேதி ஒரு கிராம் ரூ.16 ஆயிரத்து 800-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இது வரலாறு காணாத உச்சமாக பதிவானது. அதன் தொடர்ச்சியாக மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30-ந்தேதி கிராமுக்கு ரூ.950-ம், பவுனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்தது.

அதனையடுத்து கடந்த மாதம் 31-ந்தேதி மேலும் கிராமுக்கு ரூ.950-ம், பவுனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் சரிந்திருந்தது. நேற்றும் இறங்குமுகத்தில் விலை பயணித்தது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.950-ம், பவுனுக்கு ரூ.7,600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 950-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.80-ம், பவுனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 030-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை அதிகரித்தாலும், வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.20-ம், கிலோவுக்கு ரூ.20 ஆயிரமும் சரிந்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உலகளாவிய சந்தையில் டாலரின் மதிப்பு வலுவடைந்ததாலும், லாப நோக்கம் கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்வதாலும் விலை குறைந்து வருகிறது.

மேலும், வட்டி விகிதங்கள் தொடர்பான முடிவுகள் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளும் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தங்கம், வெள்ளி விலை சரிவு இனிவரும் நாட்களிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டாலும், எப்போது வேண்டுமானாலும் மீண்டும் எகிறலாம் என்பதே வியாபாரிகளின் கணிப்பாக உள்ளது.