மாவட்ட செய்திகள்

திருத்தணி அருகே ஏரியில் தச்சுத்தொழிலாளி பிணம்

திருத்தணி அருகே ஏரியில் தச்சுத்தொழிலாளியின் பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள காவேரிராஜபுரம் காலனியை சேர்ந்தவர் இளங்கோவன். (வயது 28). தச்சுத்தொழிலாளி. கடந்த மாதம் 1-ந்தேதி வீட்டை விட்டு சென்ற இளங்கோவன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை காவேரி ராஜபுரத்தில் உள்ள தரமணி ஏரியில் ஆண் பிணம் மிதப்பதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் ஏரியில் அழுகிய நிலையில் மிதந்த ஆண் உடலை வெளியே எடுத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் வீட்டில் இருந்து காணாமல் போன தச்சுத்தொழிலாளி இளங்கோவன் என்பது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்டாரா?

இதுகுறித்து அவரது தந்தை மோகன் கனகம்மாசத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் தச்சுத்தொழிலாளி இளங்கோவன் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோவன் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்று விசாரித்து வருகின்றனர்.