அவனியாபுரம்
தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சரியாக செயல்படவில்லை. சி.டி. ஆதாரத்தை வைத்து ஆட்சியை கலைக்க சொல்வது சரியல்ல. இந்த பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது. திராவிட கட்சிகள் ஒன்றை ஒன்று குறைகூறி வருகின்றன. இரண்டுமே ஊழல் கட்சிகள் தான். தலைநகர் சென்னை இன்று போதை நகரமாக மாறிவிட்டது. புழல் சிறையில் பாகிஸ்தான் கொடி கிடைத்தது எப்படி? பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி இந்த சம்பவம் நடந்துள்ளது.
மதுரையில் மோடி அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கி கண்காட்சி நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டு இருந்த பிரதமர் மோடியின் படம் கிழிக்கப்பட்டது. பா.ஜ.க. பிரமுகர் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதும், வராமல் இருப்பதும் அவரது விருப்பம். வந்தால் வரவேற்போம். அவர் அரசியலுக்கு வந்து தமிழக மக்களுக்கு நல்லது செய்யட்டும். தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க.வுக்கு மாற்றுக் கட்சியாக தி.மு.க. இல்லை. பா.ஜ.க. தான் இனி மாற்றுக் கட்சியாக செயல்படும். இது இன்னும் 3 மாதத்தில் தெரியவரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.