புதுச்சேரி

நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் வெட்டி சாய்ப்பு

சாலை விரிவாக்க பணிக்காக நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரத்தினை வெட்டி சாய்த்தன, அதனை வேருடன் பிடுங்கி வேரு இடத்தில் நட்டு பொதுமக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

திருக்கனூர்

திருக்கனூர் கடைவீதியில் ஒருபுறம் புதுச்சேரி- திருக்கனூர் பகுதியும், மறுபுறம் தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கடைவீதியும் உள்ளது. சித்தலம்பட்டு கடைவீதி மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதியான தி.புதுக்குப்பம் பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக தமிழக அரசின் நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தி.புதுக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் நூறு ஆண்டு பழமை வாய்ந்த மிகப்பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. சாலை விரிவாக்கப் பணிக்காக அகலப்படுத்தும் போது அந்த ஆலமரத்தினை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அந்த மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

அந்த மரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியாக தி.புதுக்குப்பம் கிராம பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூட்டு முயற்சியினால் பொக்லைன் எந்திரம் உதவியுடன் வேருடன் அந்த ஆலமரம் பிடுங்கப்பட்டது. பின்னர் அங்குள்ள பொம்மி ரெட்டிகுளம் கரையில் அந்த ஆலமரம் நடப்பட்டு உயிர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் அந்த மரத்திற்கு பூஜை செய்து வழிபட்டனர்.