கூடலூர்
நீலகிரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
ஊட்டி சேரிங்கிராஸ் தூய இருதய ஆண்டவர் தேவாலயத்தில் பிஷப் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதேபோல் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தாமஸ் தேவாலயத்தில் ரெவரண்ட் ஜெரோமியா தலைமையிலும், வெஸ்லி ஆலயத்தில் ரெவரண்ட் ராபின்சன் தலைமையிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள டிரினிடி தேவாலயத்தில் ரெவரண்ட் வேழவேந்தன் தலைமையிலும், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள ஐ.சி.ஆர்.எம். தேவாலயத்தில் ரெவரெண்ட் ராஜன் சாமுவேல் தலைமையிலும், இயேசு ஆலயத்தில் ரெவரண்ட் மணி தலைமையிலும், புனித மரியன்னை ஆலயத்தில் அருட்தந்தை செல்வநாதன் தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து பெந்தெகொஸ்தே சபைகளிலும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
கூடலூர் பகுதியில் பிரார்த்தனை
கூடலூரில் குழந்தை இயேசு ஆலயத்தில் பங்குத்தந்தை ஹென்றி ராபர்ட் தலைமையிலும், செயின்ட் மேரிஸ் தேவாலயத்தில் பங்குத் தந்தைகள் ரெனால்ட் பிரபு, சார்லஸ் பாபு ஆகியோர் தலைமையில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் செயின்ட் தாமஸ், புனித சூசையப்பர், சி.எஸ்.ஐ. தேவாலயம் உள்பட அனைத்து இடங்களிலும் பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இதேபோல் அனைத்து தேவாலயங்களிலும் இயேசு கிறிஸ்து சிறப்பை உணர்த்தும் வகையில் அலங்கார குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து நள்ளிரவு கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை வரவேற்கும் வகையில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதேபோல் பந்தலூர் தாலுகா மற்றும் மசினகுடி, நடுவட்டம் பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.