தமிழில் 1949-ம் ஆண்டு ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த 'வாழ்க்கை' படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர், வைஜெயந்தி மாலா. 'இரும்புத்திரை', 'பார்த்திபன் கனவு', 'தேன் நிலவு' 'பாக்தாத் திருடன்', 'சித்தூர் ராணி பத்மினி' போன்ற காலத்தால் அழியாத பல படங்களில் நடித்துள்ளார். 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் 'கண்ணும் கண்ணும் கலந்து...' என்ற பாடலுக்கு 'நாட்டிய பேரொளி' பத்மினியுடன் இணைந்து அவர் ஆடிய போட்டி பாடல், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
சென்னையில் பிறந்து வளர்ந்த அவர், சினிமா தாண்டி அரசியலிலும் ஜொலித்தார். மக்களவை, மாநிலங்களவை என இரண்டிலும் எம்.பி.யாக பணியாற்றினார். பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார். பரதநாட்டியக் கலைஞரான வைஜெயந்திமாலாவுக்கு பத்ம விபூஷண் விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர்கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்குப் பிறகு பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பல கலைஞர்கள் 'ராக் சேவா' என்ற இசை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் பிரபல நடிகரும் நடனக் கலைஞருமான வைஜெயந்தி மாலா சமீபத்தில் அயோத்தியில் பரதநாட்டியம் ஆடியுள்ளார். 90 வயதாகும் நடனக் கலைஞரின் நடனத்தைக் கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர். அவரது பரதநாட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
சமீபத்தில் சென்னையில் வைஜெயந்திமாலாவை சந்தித்தது குறித்த மகிழ்ச்சியை நடிகை ஹேமமாலினி பகிர்ந்து கொண்டார். சாய்ரா பானு, வைஜெயந்திமாலா பெற்ற விருது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார், அவரை 'அக்கா' (மூத்த சகோதரி) என்று குறிப்பிட்டார்.
சாய்ரா பானு கூறுகையில், "எனது அன்புக்குரிய அக்கா வைஜெயந்திமாலாவுக்கு பத்ம விபூஷன் விருது கிடைத்த செய்தியால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். இந்த அங்கீகாரத்திற்க்கு அவர் தகுதியானவர். என்னுடைய சிறுவயதில் இருந்தே அவரது படங்கள் என் வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வருகிறன" என்றார்.