இந்தி திரையலகில் பிரபல நடிகையாக இருக்கும் சுவரா பாஸ்கர் அடிக்கடி சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதும் இதனால் எதிர்ப்புகளுக்கு உள்ளாவதும் உண்டு. கோர்ட்டு வழக்குகளையும் எதிர்கொண்டு உள்ளார். தனுசுடன் ராஞ்சனா, மாதவனுடன் தனு வெட்ஸ் மனு ஆகிய இந்திப்படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இந்தநிலையில் தனது நண்பரும் அரசியல்வாதியுமான பகத் அகமதுவை சுவரா பாஸ்கர் திடீர் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் ரகசியமாக நடந்துள்ள இந்த திருமணத்தை சுவரா பாஸ்கர் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
பகத் அகமதுவுடன் ஏற்பட்ட அறிமுகத்தில் இருந்து திருமணமானதுவரை உள்ள பயணத்தை சிறிய வீடியோ மூலம் பகிர்ந்து இருக்கிறார். முதலில் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பிறகு அது காதலில் முடிந்தது. இந்தப்பயணத்தில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டோம். என் இதயத்துக்குள் பகத்தை வரவேற்கிறேன் என்ற பதிவையும் வெளியிட்டு உள்ளார். பகத் அகமது சமாஜ்வாடி கட்சியில் முக்கிய பிரமுகராக இருக்கிறார்.