சினிமா செய்திகள்

பிகில் திரைப்படத்திற்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி - அமைச்சர் கடம்பூர் ராஜூ

பிகில் திரைப்படத்திற்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை,

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கதிர், ஜாக்கி ஷெராஃப் உள்பட பலர் நடித்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு நாளை இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. அனைத்து தியேட்டர்களிலும் பிகில் டிக்கெட்டுகளின் முன்பதிவுகள் முடிந்துள்ளன. ரசிகர்களுக்கு பிரத்யேகமாக சிறப்பு காட்சிகள் திரையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் சிறப்பு காட்சிகளுக்கு அரசு தடை விதித்தது. அதனைத்தொடர்ந்து சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் பிகில் திரைப்படத்திற்க்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தி விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்திப்புக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவிக்கையில், விடுமுறை தினங்களில் ஏற்கனவே சிறப்புக்காட்சிக்கு அனுமதி உள்ளது. இதனால் பிகில் திரைப்படத்திற்க்கு நாளை ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறப்புக்காட்சிக்கு அரசு அனுமதித்த கட்டணத்தையே வாங்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சிறப்புக்காட்சிக்கான நிபந்தனைகளை பின்பற்றுவதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்ததால் நாளை ஒருநாள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு நாளை வெளியாகவுள்ள பிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி தந்த முதல்வர், தமிழக அரசுக்கு நன்றி என ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...