சினிமா செய்திகள்

எஸ்.ஜே.சூர்யா படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் விபத்து: சிலிண்டர் வெடித்து ஒருவர் பலி - 3 பேர் படுகாயம்

விபத்து தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வரும் 'கில்லர்' திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநராக மீண்டும் களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா

அஜித் நடித்த ’வாலி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் விஜய்யின் ’குஷி’படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். தொடர்ந்து ’நியூ’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி தனக்கென தனி இடத்தைப் பிடித்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ள 'கில்லர்' திரைப்படத்தில், நடிகை பிரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பில் நிகழ்ந்த விபத்து

இந்த நிலையில், சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடைபெற்று வந்த 'கில்லர்' படப்பிடிப்பில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. வெடிகுண்டு வெடிப்பது போன்ற காட்சியை படமாக்குவதற்காக சிலிண்டரில் வாயு நிரப்பப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்ததில் படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.