சினிமா செய்திகள்

"அந்த காட்சிகளில் நடிப்பது மிகவும் சவாலான விஷயம்" – நடிகர் யோகி பாபு

இறைவன் மீது நம்பிக்கை வைத்து, என் பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான யோகி பாபு, தற்போது கதையின் நாயகனாகவும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி, குணச்சித்திர மற்றும் கதாநாயகன் வேடங்களிலும் தனது திறமையை நிரூபித்து வரும் அவர், தற்போது ‘சன்னிதானம் பி.ஓ.’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சர்வதா சினி கரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், அமுதா சாரதி எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகை சித்ரா, கஜராஜ் மற்றும் வர்ஷா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.

தாயின் பாசப் போராட்டத்தை பேசும் கதை

‘சன்னிதானம் பி.ஓ.’ திரைப்படம் உணர்வுபூர்வமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சபரிமலைக்கு இருமுடி கட்டிச் செல்லும் தனது சிறுவயது மகனைத் தொலைக்கும் வாய் பேச முடியாத தாயின் வேதனையும், அவரின் பாசப் போராட்டத்தையும் மையமாக வைத்து படம் நகர்கிறது. குடும்ப உறவுகள், தாய்ப்பாசம் மற்றும் மனித உணர்வுகளை வலுவாக வெளிப்படுத்தும் இந்தக் கதை, ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

"நல்ல பெயர்தான் என் இலக்கு" – யோகி பாபு

இந்தப் படம் குறித்து பேசிய யோகி பாபு, “நகைச்சுவைக் காட்சிகளில் நடிப்பதை விட எமோஷனல் காட்சிகளில் நடிப்பது மிகவும் சவாலான விஷயம். காமெடியனாக என்னைப் பார்த்த ரசிகர்களுக்கு, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் என்னை ஏற்றுக்கொள்ள வைப்பது எளிதான காரியம் அல்ல. அதற்காக அதிக உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை கிடைக்கும் அனைத்து படங்களிலும் நடிக்க வேண்டும் என்பதல்ல என் நோக்கம். நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் எனக்கு நல்ல பெயரையும், ரசிகர்களின் அங்கீகாரத்தையும் பெற்றுத் தர வேண்டும் என்பதே என் விருப்பம். இறைவன் மீது நம்பிக்கை வைத்து, என் பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.