சென்னை,
வரதன், விக்ருதி, சூப்பர் சரண்யா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை மமிதா பைஜு. கேரள நடிகையாக இவருக்கு தென்னிந்தியளவில் பெரும் புகழைப் பெற்றுத்தந்த திரைப்படம் பிரேமலு. இப்படத்தின் நாயகியாக நடித்து அசத்தியவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.
தமிழிலும் பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் திரைப்படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார். தற்போது, நடிகர் விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் இறுதியில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
மேலும், நடிகர் தனுஷுடன் கர, சூர்யாவுடன் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம் மற்றும் நடிகர் நிவின் பாலியுடன் பத்தேலம் குடும்ப யூனிட் உள்ளிட்ட 5 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இந்தநிலையில், நடிப்பு பல்கலைக்கழகம் தனுஷ் என நடிகை மமிதா பைஜு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
தனுஷ் ஒரு நடிப்பு பல்கலைக்கழகம் மாதிரி. அவருடன் நடித்ததில் நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டோம். குறிப்பாக துணை நடிகர்களுக்கு அவர் கொடுக்கும் சவுகரியுமான சூழல் வேற லெவெல்.
கர படத்தின் மூலம் முதல் முறையாக கிராம பெண் கதாபாத்திரத்தில் நடித்ததாகவும் அந்த லுக் மற்றும் ரோல் தனக்கு மிகவும் நன்றாக பொருந்தியுள்ளதாகவும் மமிதா பைஜு கூறியுள்ளார்.