சினிமா செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் - அப்பலோ மருத்துவமனை அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

ஐதராபாத்,

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் ரஜினிகாந்துக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று தெரியவந்தது. எனினும் பாதுகாப்பு கருதி அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் அவர் ஐதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். அவரது மகள் ஐஸ்வர்யா தனுசும் உடன் இருந்தார். இந்த சூழலில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் அவர் ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தில் கடுமையான மாறுபாடுகள் இருப்பதாகவும், இதற்காக பரிசோதனை தேவைப்படுவதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஆஸ்பத்திரி பின்னர் அறிக்கை வெளியிட்டது.

அவருக்கு ரத்த அழுத்த மாறுபாடு மற்றும் சோர்வை தவிர வேறு எந்த அறிகுறியும் இல்லை எனவும், நாடித்துடிப்பு உள்ளிட்ட பிற செயல்பாடுகள் அனைத்தும் சீராக இருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். தேவையான சிகிச்சைகளையும் வழங்கினர். இதனால் ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று காலை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் இரவில் நன்றாக ஓய்வு எடுத்தார். நேற்று (நேற்று முன்தினம்) இருந்ததைவிட அவரது ரத்த அழுத்தம் நல்ல கட்டுப்பாட்டில் இருக்கிறது. என்றாலும் ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது.

ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அபாயகரமான நிலை எதுவுமில்லை என்று தெரியவந்துள்ளது. அவருக்கு இன்னும் சில பரிசோதனைகள் செய்யப்பட உள்ளன. அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருக்கிறார். அவரது ரத்த அழுத்தத்தை கருத்தில்கொண்டு, முழுமையான ஓய்வு எடுக்கும்படி அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது. அவரை சந்திக்க பார்வையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்துக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகள் மற்றும் ரத்த அழுத்தத்தின் அடிப்படையில் அவர் எப்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் நேற்று மாலையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சில பரிசோதனைகளின் முடிவுகள் இன்னும் வரவேண்டியுள்ளன. அவற்றின் அடிப்படையிலும், அவரது ரத்த அழுத்த நிலவரத்தின் அடிப்படையிலும், அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று பிற்பகலில் முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ரஜினிகாந்துக்கு ரத்த அழுத்த மாறுபாடு சீராகியுள்ளது. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். மேலும் ஒரு வாரம் முழுஓய்வில் இருக்கவேண்டும் மற்றும் இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

மன அழுத்தத்தை தடுக்கும் வகையில் ஓய்வுஎடுக்க வேண்டும். கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். ரஜினியின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்