சென்னை
அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள நடிகர் ரஜினிகாந்த் திட்டமிட்டு உள்ளார். கமல்ஹாசன் பிப்.21 ஆம் தேதி அரசியல் பயணத்தை தொடங்கும் சூழலில் ரஜினி இந்த திட்டத்தை வகுத்துள்ளார். அதுபோல் மதுரை அல்லது திருச்சியில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளாதாகவும் ரஜினி மக்கள் மன்றத்தினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.
ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்தில், அவரது நண்பரும், அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியன் இன்று சந்தித்தார்.இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பில் ரஜினியின் தீவிர அரசியல் குறித்தும், மாவட்டம் தோறும் நிர்வாகிகளை விரைந்து நியமிப்பது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மாத இறுதிக்குள் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகள் அனைவரையும் நியமித்துவிட்டு, தமிழகம் முழுவதும் ரஜினி சுற்றுப்பயணம் மேற்கொள்வது தொடர்பாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.