சினிமா செய்திகள்

‘‘பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும்’’ நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை

‘‘பட அதிபர்கள்–பெப்சி தொழிலாளர்கள் பிரச்சினையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்’’ என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

சென்னை,

பட அதிபர்களுடன் ஏற்பட்ட மோதலால் பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டு உள்ளன. சில தயாரிப்பாளர்கள் வெளி மாநில தொழிலாளர்களை அழைத்து வந்து படப்பிடிப்புகளை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த், இந்த பிரச்சினை குறித்து நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

எனக்கு பிடிக்காத சில சொற்களில் வேலை நிறுத்தம் என்பது ஒன்று. எந்த பிரச்சினையாக இருந்தாலும் சுயகவுரவம் பார்க்காமல் பொதுநலத்தை மட்டும் கருதி அன்பான வார்த்தைகளிலே பேசி தீர்வு காணலாம். தயாரிப்பாளர் சங்கமும் பெப்சி சம்மேளனமும் கலந்து பேசி கூடிய சீக்கிரம் சுமுகமான தீர்வு காண வேண்டுமென்று மூத்த கலைஞன் என்கின்ற முறையில் எனது அன்பான வேண்டுகோள்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

திரையுலகில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் பெப்சி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கிறார்கள். அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. நடிகர் ரஜினிகாந்தை பெப்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தினோம்.

வேலை நிறுத்தத்தால் ரஜினிகாந்தின் காலா படப்பிடிப்புக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்காக ரஜினிகாந்திடம் வருத்தம் தெரிவித்தோம். வேலை நிறுத்தத்துக்கு நாங்கள் காரணம் இல்லை என்பதையும் தெரிவித்தோம். இரு தரப்புக்கும் சமரசம் செய்து வைக்கும்படியும் வேண்டுகோள் விடுத்தோம். அப்போது ரஜினிகாந்த் எங்களிடம் எந்த ஒரு பிரச்சினைக்கும் வேலை நிறுத்தம் தீர்வாகாது என்று கூறினார். வேலை நிறுத்தத்தால் திரையுலகத்துக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அவரிடம் கூறினோம். நடிகர் என்பதை தாண்டி உங்கள் மீது அனைவரும் மரியாதை வைத்து இருக்கிறார்கள். மூத்த கலைஞரான நீங்கள் பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு அவர் சம்மதித்தார். கமல்ஹாசனையும் நேரில் சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காண வற்புறுத்தி உள்ளோம்.

விஷால் வெளியூர் படப்பிடிப்பில் இருக்கிறார். அவரை சந்தித்து பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு சம்பளம் பிரச்சினை இல்லை. பயணப்படி உள்ளிட்ட சில பொதுவிதிகளில்தான் முரண்பாடுகள் உள்ளது. பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காணலாம்.

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.