திருவனந்தபுரம்,
சொகுசு காருக்கு வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக, போலி ஆவணங்கள் மூலம் காரை பதிவு செய்ததாக நடிகை அமலா பால், நடிகர் பகத் பாசில் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இதுபற்றிய விசாரணையை தொடர்ந்து, இருவர் மீதும் திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ரூ.20 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்புடைய சொகுசு கார்களுக்கு கேரளாவில் 20 சதவீத மோட்டார் வாகன வரி செலுத்த வேண்டும். ஆனால், புதுச்சேரியில் அந்த வரி கிடையாது. எனவே, அமலா பால், பகத் பாசில் ஆகிய இருவரும், புதுச்சேரியில் வசிப்பதுபோல் போலி முகவரி கொடுத்து, அதற்கான போலி ஆவணங்களுடன் புதுச்சேரியில் காரை பதிவு செய்துள்ளனர்.
இருவருமே கேரளாவில் வசிப்பவர்கள். கேரளாவில் உள்ள வங்கியில் வாகன கடன் பெற்று கார் வாங்கி உள்ளனர். ஆனால், வரியை தவிர்ப்பதற்காக, புதுச்சேரியில் காரை பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.