சினிமா செய்திகள்

நடிகை துனீஷாவின் மொபைல் போனை உடைத்து, கொல்ல முயற்சி: தாயார் மீது ஷீஜன் கானின் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு

நடிகை துனீஷாவின் மொபைல் போனை உடைத்து, அவரை கொல்ல முயற்சி செய்துள்ளார் என அவரது தாயார் மீது ஷீஜன் கானின் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

புனே,

தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பிரபல இளம் நடிகை துனீஷா சர்மா (வயது 21). வளர்ந்து வரும் நடிகையாக அறியப்பட்ட அவர், கடந்த 24-ந்தேதி அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

சக நடிகர்கள், கலைஞர்களுடன் ஒன்றாக உணவு சாப்பிட்ட பின்னர், திடீரென படப்பிடிப்பு தளத்தில் தூக்கு போட்டு உயிரிழந்த நிலையில், போலீசார் அவரது உடலை கண்டெடுத்தனர். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

காதல் தோல்வியால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என பரபரப்பாக பேசப்படுகிறது. நடிகை துனீஷாவை தற்கொலைக்கு தூண்டினார் என்று அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், சக நடிகரான ஷீஜன் கான் என்பவரை வாலிவ் நகர போலீசார் கைது செய்து, கொலை மற்றும் தற்கொலை என்ற கோணங்களில் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

துனீஷா மரணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துள்ளனர். இதனை தொடர்ந்து, 15 நாட்கள் பிரிவுக்கு பின்னர் துனீஷாவை மரணத்திக்கு இட்டு சென்ற விசயம் என்ன?, இருவருக்கும் இடையே நடந்தது என்ன? என்பது பற்றி அறிவதற்காக இருவரின் மொபைல் போன்கள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை வழக்குடன் தொடர்புடைய 27 பேரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டு உள்ளன. படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும் என போலீசார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், நடிகை துனீஷாவின் இறுதி சடங்குகள் கடந்த டிசம்பர் 27-ந்தேதி நடந்து முடிந்தன. மீரா சாலையில் உள்ள தகன மேடையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், துனீஷா மரண வழக்கில் கைது செய்யும்போது, நடிகர் ஷீஜன் கான் தனது மொபைல் போனில் பல்வேறு சாட்டிங் செய்த தகவல்களை அழித்து உள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

விசாரணையின்போது, முறையாக அவர் ஒத்துழைக்கவில்லை என்றும், ரகசிய காதலியுடனான சாட்டிங் பற்றி கேட்டதற்கு முன்னுக்கு பின் முரணாக தகவல்களை மாற்றி, மாற்றி கூறியுள்ளார் என தெரிவித்து உள்ளனர்.

அழிக்கப்பட்ட பல சாட்டிங் தகவல்கள் மீண்டும் கிடைத்தபோது, அதில் பல பெண்களுடன் நடிகர் ஷீஜன் பேசியுள்ளது தெரிய வந்துள்ளது. குற்றவாளியின் மொபைல் போனில் பல முக்கிய சாட்டிங் தகவல்கள் உள்ளன என்றும் கோர்ட்டில் தெரிவித்தனர்.

உறவை முறித்து கொண்ட பின்பு, துனீஷாவை அவர் தவிர்க்க தொடங்கியுள்ளார். துனீஷா தொடர்ச்சியாக மெசெஜ் செய்து வந்துள்ளார். ஆனால், அதற்கு பதிலளிக்காமல் அவர் தவிர்த்து வந்துள்ளார் என போலீசார் தெரிவித்து இருந்தனர்.

துனீஷாவின் தாயார் வனிதா பத்திரிகையாளர் சந்திப்பில் கூறும்போது, கொலைக்கான சந்தேகம் உள்ளது. ஷீஜனின் அறையில் துனீஷா எப்படி இருக்க முடியும்? துனீஷாவை ஷீஜன் மட்டுமே தூக்கி கொண்டு வெளியே வந்துள்ளார்.

ஆம்புலன்சையோ, மருத்துவர்களையோ அவர் கூப்பிடவில்லை. துனீஷாவை ஹிஜாப் அணியும்படி அவர் கூறினார் என்று குற்றச்சாட்டாக கூறியுள்ளார். துனீஷாவை, ஷீஜன் கன்னத்தில் அறைந்துள்ளார் என்றும் கூறியுள்ளார். இந்த வழக்கில், நடிகர் ஷீஜன் கானுக்கு 14 நாட்கள் விசாரணை காவலுக்கு அனுமதி அளித்து, கடந்த டிசம்பர் 31-ந்தேதி கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.

இந்த நிலையில், நடிகர் ஷீஜன் கானின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, துனீஷாவின் மாமா என கூறப்படும் பவன் சர்மா அவரது முன்னாள் மேலாளர். 4 ஆண்டுகளுக்கு முன்பே அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.

துனீஷாவின் பண விவகாரங்களை சண்டிகாரில் உள்ள அவரது மாமாவான சஞ்சீவ் கவுசல் மற்றும் தாயார் வனிதா கட்டுக்குள் வைக்கும் வழக்கம் கொண்டுள்ளனர். துனீஷா தனக்கு தேவையான பணம் வேண்டுமென்றால் கூட அவரது தாயார் முன் நின்று கெஞ்ச வேண்டியிருந்தது என்று தெரிவித்து உள்ளார்.

துனீஷா, சஞ்சீக் கவுசலின் பெயரை கேட்டாலே பயப்படுவார். அவரது தூண்டுதலின் பேரிலேயே, துனீஷாவின் மொபைல் போனை அவரது தாயார் உடைத்து உள்ளார். துனீஷாவை அவர் கொல்லவும் முயற்சி செய்துள்ளார் என ஷீஜன் கானின் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்