அஜித்குமாரின் வலிமை படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஒரு பைக் துரத்தல் சண்டை காட்சி மட்டுமே பாக்கி உள்ளது. அதை ரஷியாவில் படமாக்க உள்ளனர். ஓரிரு வாரங்களில் முழு படத்தையும் முடித்து அடுத்த மாதம் (செப்டம்பர்) தொடக்கத்தில் இருந்து டப்பிங், கிராபிக்ஸ், இசை கோர்ப்பு போன்ற தொழில்நுட்ப பணிகளை தொடங்குகிறார்கள். இதில் அஜித் ஜோடியாக கியூமா குரோஷி நடிக்கிறார். வினோத் இயக்குகிறார்.
இந்த நிலையில் அஜித் அடுத்த புதிய படத்தில் நடிக்க தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர் என்றும், புதுச்சேரி, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இது அஜித்துக்கு 61-வது படம். இந்த படத்தையும் வினோத் இயக்க இருப்பதாகவும், போனிகபூர் தயாரிக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மீண்டும் அஜித், வினோத், போனிகபூர் புதிய படத்தில் இணைகின்றனர்.