அஜித் நடிப்பில் விவேகம் படம் வெளியானது. இப்படத்தை வீரம், வேதாளம் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். விவேகம் படம் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலில் அதிக சாதனை படைத்தது.
இப்படத்தை அடுத்து, மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், விவேகம் படத்தின் போது ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் அஜித். இதனால், அடுத்த பட அறிவிப்பை அறிவிக்காமல் இருந்தார். தற்போது அஜித்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது.
அஜித்தின் அடுத்த படத்தை மீண்டும் சிவாவே இயக்க இருக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த புதிய படத்திற்கும் வீரம், வேதாளம், விவேகம் படங்களில் அமைந்த வி வரிசையில் விசுவாசம் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு 2018 ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது. தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட இருக்கிறார்கள்.