அமராவதி,
சிவனடியார் கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை கூறும் வகையில், 'கண்ணப்பா' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் கண்ணப்ப நாயனாரின் கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு நடிக்கிறார். இந்த படத்தை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் பான் இந்தியன் திரைப்படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
'கண்ணப்பா' திரைப்படத்தை ஏ.வி.ஏ. என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி பேனரின் கீழ் விஷ்ணு மஞ்சுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான மோகன்பாபு தயாரிக்கவுள்ளார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மகாபாரதம்' தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இந்த படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல இந்தி நடிகர் அக்சய் குமார் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் தெலுங்கு திரையுலகில் நடிகர் அக்சய் குமார்அறிமுகமாக உள்ளார். நடிகர் அக்சய் குமாரை தெலுங்கு சினிமாவிற்கு வரவேற்பதாக நடிகர் விஷ்ணு மஞ்சு 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு அக்சய் குமார் தனது 'எக்ஸ்' தளத்தில், "கண்ணப்பாவின் பயணத்தில் என்னை இணைத்துக் கொண்டதற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். மேலும் 'கண்ணப்பா' திரைப்படத்தில் நடிகர் மோகன்லால், பிரபாஸ், மோகன்பாபு, சரத்குமார், பிரம்மானந்தம், நடிகை பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இந்த படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.